ஜெயலலிதா ஜூஸ் குடித்தாரா? இல்லையா? அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலத்தால் புதிய குழப்பம்

 

ஜெயலலிதா ஜூஸ் குடித்தாரா? இல்லையா? அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலத்தால் புதிய குழப்பம்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ வெளியான நிலையில், தற்போது அப்பல்லோ மருத்துவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதனையடுத்து விசாரணையை தொடங்கிய ஆணையம், பல்வேறு நபர்களுக்கு சம்மன் ஆனுப்பி விசாரித்து வருகிறது.

அந்த வகையில், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான  விசாரணை ஆணையம் முன், அப்பல்லோ மருத்துவமனை நோய் தொற்று சிறப்பு மருத்துவர் ராமகோபால கிருஷ்ணன், நரம்பியல் பிரிவு டெக்னீசியன் யுவ ஸ்ரீ, தீவிர சிகிச்சை பிரிவு டெக்னீசியன் பஞ்சாபிகேசன் உள்ளிட்டோர் நேற்று ஆஜராகினர். அப்போது, 2016-ஆம் அண்டு நவம்பர் 15-ம் தேதிக்குள் ஜெயலலிதாவுக்கு  இருந்த நோய் தொற்று முழுமையாக சரியாகிவிட்டதாக மருத்துவர் ராமகோபால கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்தார்.

ஆனால் நோய் தொற்று காரணமாக இதயம், நுரை​யீரல் பாதிக்கப்பட்டது தான் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் என அப்பலோ மருத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவர் வாக்குமூலத்துக்கும், மருத்துவ அறிக்கையிக்கு வேறுபாடு உள்ளதால் இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அதேபோல், ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த தீவிர சிகிச்சை பிரிவு அறையில் டெக்னீசியனாக பணியாற்றிய பஞ்சாபிகேசனிடம் ஜெயலலிதா இருந்த அறை குறித்து ஆணையம் கேள்வி எழுப்பியது. அதற்கு அவர், ஜெயலலிதா இருந்த அறையின் ஜன்னல் கண்ணாடி திரைச்சீலையால் மூடப்பட்டிருக்கும் என்று பதில் அளித்துள்ளார்.

முன்னதாக, ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டிருந்தார். தற்போது, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையின் ஜன்னல் கண்ணாடி திரைச்சீலையால் மூடப்பட்டிருக்கும் என அப்பல்லோ டெக்னீசியன் பஞ்சாபிகேசன் வாக்குமூலம் அளித்துள்ளதால், அந்த வீடியோ எவ்வாறு எடுக்கப்பட்டிருக்கும் எனவும், அது உண்மையான வீடியோவா அல்லது போலி வீடியோவா எனவும் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ அவர் தங்கி இருந்த அறையில் எடுக்கப்பட்டது தானா? என்ற குழப்பம் ஏற்கனவே நீடித்து வரும் நிலையில், டெக்னீசியன் பஞ்சாபிகேசனின் வாக்குமூலம் மீண்டும் புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள், பஞ்சாபிகேசனிடம் குறுக்கு விசாரணை செய்த போது, “திரைச்சீலை சில சமயங்களில் திறந்து விடப்படும். அப்போது அறைக்கு வெளியே மரங்கள் இருப்பது தெரியும்” என்று பதில் அளித்துள்ளார்.