ஜெயலலிதா இறுதி சடங்கிற்கு அரசு சார்பில் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

 

ஜெயலலிதா இறுதி சடங்கிற்கு அரசு சார்பில் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறுதி சடங்கிற்கு அரசு சார்பில் செலவிடப்பட்ட தொகை குறித்த விவரம் தெரியவந்துள்ளது

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறுதி சடங்கிற்கு அரசு சார்பில் செலவிடப்பட்ட தொகை குறித்த விவரம் தெரியவந்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதியன்று இரவில் உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, அதே ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி இரவு 11.30 மணியளவில் உயிரிழந்ததாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையடுத்து, சென்னை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அரசு மரியாதையுடன் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜி.ஆர்., நினைவிடம் அருகே ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், மதுரை கே.கே.நகரை சேர்ந்த சையது தமீம் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஜெயலலிதா இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கான செலவு விபரம் கேட்டு முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் பொது தகவல் தொடர்பு அதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு தற்போது பொதுப்பணித் துறை சார்பில் பதில் தரப்பட்டுள்ளது.

அதில், ஜெயலலிதா இறுதி சடங்கு நிகழ்ச்சிக்காக அரசு சார்பில் ரூ.99.33 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றதற்கான செலவை தமிழக அரசு செய்யவில்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.