ஜெயலலிதாவை ஸ்லோ பாய்சன் வைத்துக் கொன்று விட்டனர்: சசிகலா குடும்பத்தினர் மீது அமைச்சர் குற்றச்சாட்டு

 

ஜெயலலிதாவை ஸ்லோ பாய்சன் வைத்துக் கொன்று விட்டனர்: சசிகலா குடும்பத்தினர் மீது அமைச்சர் குற்றச்சாட்டு

ஜெயலலிதாவை ஸ்லோ பாய்சன் வைத்து சசிகலா குடும்பத்தினர் கொன்று விட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்

திண்டுக்கல்: ஜெயலலிதாவை ஸ்லோ பாய்சன் வைத்து சசிகலா குடும்பத்தினர் கொன்று விட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, மருத்துவமனையில் முகாமிட்டிருந்த அதிமுக செய்தித் தொடர்பாளர்கள், மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் என அனைவரும் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் எனவும், அவர் இட்லி சாப்பிடுகிறார் எனவும், அங்குள்ள செவிலியர்களிடம் சகஜமாக பேசுகிறார் எனவும் கூறி வந்தனர். ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அணிகள் பிரிவு, அணிகள் இணைப்பு என ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பட்டதையடுத்து, தாங்கள் அவரை பார்க்கவே இல்லை என்றும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

ஜெயலலிதா மறைந்து இரண்டாம் ஆண்டு வரவுள்ள நிலையிலும், அவரது மரணத்தில் உண்டான சர்ச்சை இன்னும் மறையவில்லை. நாள்தோறும் அது தொடர்பான பேச்சுகள் ஏதாவது ஒரு சூழலில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதனையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வருகிறது.

இந்நிலையில், அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதாவை ஸ்லோ பாய்சன் வைத்து சசிகலா குடும்பத்தினர் கொன்று விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.