ஜெயலலிதாவுக்கு எதிராக விஜயகாந்த் பேசியது அவதூறுதான்… இனி இப்படி செய்யக்கூடாது என்று எச்சரித்த உயர் நீதிமன்றம்!

 

ஜெயலலிதாவுக்கு எதிராக விஜயகாந்த் பேசியது அவதூறுதான்… இனி இப்படி செய்யக்கூடாது என்று எச்சரித்த உயர் நீதிமன்றம்!

தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இனி இப்படி நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கக் கூடாது என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இனி இப்படி நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கக் கூடாது என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு தேனியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை விமர்சித்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பேசியிருந்தார். அப்போது விஜயகாந்த் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் கூட. விஜயகாந்த் பேச்சைத் தொடர்ந்து தேனி நீதிமன்றத்தில் அ.தி.மு.க அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது விஜயகாந்த் தரப்பு.

vijayakanth-with-jayalalitha

அ.தி.மு.க – தே.மு.தி.க மோதல் எல்லாம் ஜெயலலிதா மறைவோடு முடிந்துவிட்டது. தற்போது அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க உள்ளது. இதனால், தே.மு.தி.க மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் திரும்பப்பெறப்பட்டுவருகின்றன. அந்த வகையில் தேனி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற, உயர் நீதிமன்றத்தில் விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவை முதலில் வாபஸ் பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தன்னுடைய மேல் முறையீட்டு மனுவை திரும்பப் பெறுவதாக விஜயகாந்த் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் சுப்பிரமணியம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

theni-court

இத்தனை ஆண்டுகள் வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையில், திடீரென்று வழக்கை திரும்பப் பெறுவதாக விஜயகாந்த் தரப்பில் கூறியதால் நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர். “மேல் முறையீட்டு மனுவில் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறிவிட்டு, தற்போது வழக்கை திரும்பப் பெற அனுமதி கேட்பது நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது போன்றது. இதற்கு உங்கள் மீது அபராதம் விதிக்கலாம். எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் பேசிய பேச்சுக்கள் அவதூறானவைதான். எதிர்கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கூறியது படி நடக்க வேண்டும். அரசியல் சூழ்நிலைகளை பற்றி விவாதிக்க இது இடமில்லை. வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, மேல் முறையீட்டு மனுவை டிஸ்மிஸ் செய்கிறோம்” என்றனர்.
விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மன்னிப்பு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து இனி இப்படி செயல்படக் கூடாது என்று கண்டிப்புடன் கூறிய நீதிபதிகள் அபராதம் விதிப்பதைத் தவிர்ப்பதாக கூறினர்.