ஜெயலலிதாவுக்கு அப்போலோவில் சிகிச்சை செலவு எவ்வளவு தெரியுமா? கடன் பாக்கியும் உள்ளதாம்

 

ஜெயலலிதாவுக்கு அப்போலோவில் சிகிச்சை செலவு எவ்வளவு தெரியுமா? கடன் பாக்கியும் உள்ளதாம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கான செலவு விவரங்களை அப்போலோ நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையத்தில் வழங்கியுள்ளது

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கான செலவு விவரங்களை அப்போலோ நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையத்தில் வழங்கியுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதியன்று இரவில் உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, அதே ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி இரவு 11.30 மணியளவில் உயிரிழந்ததாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

jayalalithaa

இதையடுத்து, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரித்து வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கான செலவு விவரங்களை அப்போலோ நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையத்தில் வழங்கியுள்ளது. அதில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கான செலவு ரூ.6.85 கோடி எனவும், மருத்துவ செலவுக்கான பணம் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது, இறப்பிற்கு பின்னரும் என மொத்தமாக ரூ.6.41 கோடி காசோலையாக வழங்கப்பட்டது. ரூ.44.56 லட்சம் பாக்கி தொகை தர வேண்டியுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதாவின் உணவுக்கு ரூ.1.17 கோடியும், அறை வாடகைக்கு ரூ.1.48 கோடியும், லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலேவிற்கு ரூ.92.7 லட்சமும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பிசியோதெரபி சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு ரூ.1.29 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.