ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸி.,யை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது

 

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸி.,யை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

போட்செஸ்ட்ரூம்: ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் லீக் போட்டியில் இலங்கையை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது லீக் போட்டியில் ஜப்பானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிக எளிதாக தோற்கடித்தது. இதையடுத்து 3-வது லீக் போட்டியில் நியூசிலாந்து எதிராக இந்திய அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. இந்நிலையில், சூப்பர்லீக் காலிறுதி போட்டி 1-இல் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வாலும் (62 ரன்கள்), அதர்வாவும் (55 ரன்கள்) சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார்கள். மேலும் ரவி பிஷ்னாய் 30 ரன்களும், சித்தேஷ் வீர் 25 ரன்களும் எடுத்தனர். இந்நிலையில் 234 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க வீரர் சாம் மட்டும் நிலைத்து நின்று ஆடி 75 ரன்களை குவித்தார். அதேபோல லியாம் ஸ்காட் 35 ரன்கள் எடுத்தார்.

மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் இந்திய பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணி 43.3 ஓவர்களில் 159 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் கார்த்திக் 4 விக்கெட்டுகளும், ஆகாஷ் சிங் 3 விக்கெட்டுகளும், ரவி பிஷ்னாய் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணியின் கார்த்திக் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர்லீக் அரையிறுதி போட்டி 1-க்கு முன்னேறியுள்ளது.