ஜியோவை ஓவர்டேக் செய்த பி.எஸ்.என்.எல்….. மறுமலர்ச்சி நடவடிக்கைகளை வேகப்படுத்துமா மத்திய அரசு?

 

ஜியோவை ஓவர்டேக் செய்த பி.எஸ்.என்.எல்…..  மறுமலர்ச்சி நடவடிக்கைகளை வேகப்படுத்துமா மத்திய அரசு?

கடந்த டிசம்பர் மாதத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிதாக 4.28 லட்சம் மொபைல் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. அதேசமயம் அந்த மாதத்தில் ஜியோவில் புதிதாக 82 ஆயிரம் வாடிக்கையாளர்கள் மட்டுமே இணைந்துள்ளனர்.

தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தள்ளாட்டம் கண்டு வருகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது 4ஜி சேவையை வழங்கி வருவதோடு, 5ஜி நெட்வொர்க்கை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால் பி.எஸ்.என்.எல். நிறுவனமோ இன்னும் 3ஜி நெட்வொர்க்கிலிருந்து மாறவில்லை. தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருப்பது, கடுமையான நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மோசமான நிலையில் இருந்து வருகிறது.

டிராய்

இந்த சூழ்நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் வழங்கிய மொபைல் இணைப்புகள் குறித்த புள்ளிவிவரத்தை தொலைத்தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, 2019 டிசம்பர் மாதத்தில் பி.எஸ்.என்.எல். மற்றும் ஜியோ ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே புதிதாக மொபைல் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளன. குறிப்பாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் அந்த மாதத்தில் புதிதாக 4.26 லட்சம் மொபைல் இணைப்புகளை வழங்கியுள்ளது. ஆனால் ஜியோ நிறுவனம் வெறும் 82,308 மொபைல் இணைப்புகளை மட்டுமே வழங்கியுள்ளது. அதேசமயம் வோடாபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முறையே 36 லட்சம் மற்றும் 11,050 வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

ஜியோ நெட்வொர்க்

குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்ட ஜியோ நிறுவனத்துக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனம் சிறந்த போட்டியாளராக உருவாகியுள்ளதை கடந்த டிசம்பர் மாத மொபைல் இணைப்பு புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்த நேரத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புத்துயிர் நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவுப்படுத்தினால் எதிர்காலத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மீண்டும் தொலைத்தொடர்பு துறையில் தனது கொடியை பறக்கவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.