ஜார்க்கண்டில் இன்று இறுதி கட்ட தேர்தல்! 16 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…

 

ஜார்க்கண்டில் இன்று இறுதி கட்ட தேர்தல்! 16 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று 5வது மற்றும் இறுதி கட்டமாக 16 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. அரசின் பதவிக் காலம் 2020 ஜனவரி 5ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள தொடங்கியது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த நவம்பர் 30ம் தேதி தொடங்கி மொத்தம் 5 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தொகுதிகள் வரைபடம்
 

அதன்படி, கடந்த மாதம் 30ம் தேதி முதல் கட்டமாக 13 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அதனை தொடர்ந்து  கடந்த 7ம் தேதி (20 தொகுதிகள்), 12ம் தேதி (17 தொகுதிகள்), கடந்த 16ம் தேதியில் (15 தொகுதிகள்) தேர்தல்கள் நடைபெற்றது. இந்நிலையில் இன்று 5வது மற்றும் இறுதி கட்டமாக ஜமா, ராஜ்மஹால் போரியோ, தும்கா உள்பட 16 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி அளவில் அந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு

தேர்தல் நடைபெறும் 16 தொகுதிகளிலும் வாக்குசாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23ம் தேதி வெளியாகும்.

பா.ஜ.க.

 மகாராஷ்டிராவில் அதிக இடங்களை வென்றபோதிலும் பா.ஜ.க.வால் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆகையால், சிறிய மாநிலமாக இருந்தாலும் இங்கு ஆட்சியை தக்கவைத்தால் மட்டுமே தனது செல்வாக்கை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் பா.ஜ.க. உள்ளது.