ஜாமினில் வெளிவந்த நிர்மலா தேவி முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்!

 

ஜாமினில் வெளிவந்த நிர்மலா தேவி முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்!

நிர்மலா தேவியின் உறவினர்கள் யாரும் அவருக்கு ஜாமின் கையெழுத்து போட முன்வராததால், அவரால் சிறையிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டது

ஸ்ரீவில்லிப்புத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறாக பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த பேராசிரியை நிர்மலா தேவி, முதன் முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். சிபிசிஐடி காவல் நிறைவடைந்து, மதுரை சிறையில் நிர்மலா தேவி அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் நிர்மலா தேவி அடுத்தடுத்து தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் அனைத்தும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

nirmala devi

இதனிடையே, நிர்மலா தேவி வழக்கில் உயரதிகாரிகள் என கூறப்படுவோரிடம் உரிய விசாரணை நடத்தப்படவில்லை, சிபிசிஐடி விசாரணையில் திருப்தி இல்லை என கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது நிர்மலா தேவியின் ஜாமின் மனுவையும் இந்த நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கு தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்க கூடாது. நீதமன்ற விசாரணையின் போது ஆஜராக வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து அவருக்கு ஜாமின் வழங்கியது உயர் நீதிமன்ற மதுரை கிளை. எனினும், நிர்மலா தேவியின் உறவினர்கள் யாரும் அவருக்கு ஜாமின் கையெழுத்து போட முன்வராததால், அவரால் சிறையிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டது.

nirmala devi

அதன்பின்னர், நிர்மலா தேவியின் சகோதரர் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் ஜாமின் கொடுத்து கையெழுத்திட்டதை தொடர்ந்து, அவர் ஜாமினில் வெளிவந்தார்.

இந்நிலையில், சுமார் 11 மாதங்கள் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த நிர்மலா தேவி, ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் முதன் முறையாக ஆஜரானார். இந்த வழக்கில் கைதான உதவி பேரசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிர்மலா தேவி  உள்பட 3 பேரையும் வருகிற ஏப்ரல் மாதம் 22-ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

இதையும் வாசிங்க 

நிரவ் மோடி கலைப்படைப்புகள் ரூ.59.37 கோடிக்கு ஏலம்!