ஜாக்டோ-ஜியோ மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுக: இந்திய கம்யூ., வலியுறுத்தல்

 

ஜாக்டோ-ஜியோ மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுக: இந்திய கம்யூ., வலியுறுத்தல்

அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது

சென்னை: அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பணியாளர்கள் – ஆசிரியர்கள் அமைப்புகள் இணைந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்களை 9 தினங்கள் மேற்கொண்டனர்.

முதலமைச்சர் அழைத்து பேசி சுமுகத் தீர்வுகாண வேண்டும் என போராட்டக்குழுவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்தன. வேண்டுகோளை அரசு புறக்கணித்த நிலையில், மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டுமென முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று தங்களது தொடர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு பணிக்கு திரும்பவது என்று ஜாக்டோ- ஜியோ அமைப்பு மேற்கொண்ட முடிவு வரவேற்கதக்கது. பாராட்டுக்குரியது.

அவர்கள் பணிக்கு திரும்பிய நிலையில் அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் இடமாறுதல் போன்ற அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு ரத்து செய்யும் என எதிர்ப்பார்பது தவறல்ல.

அரசு தனது முடிவை வெளிப்படையாக தெரிவிப்பதுடன், அரசுப் பணியாளர்கள்  ஆசிரியர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் இடமாறுதல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்து ஆசிரியர் தாங்கள் பணியாற்றிய பள்ளிகளில் பணிபுரிந்திட உரிய உத்திரவுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.