ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்

 

ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்

ஜாக்டோ ஜியோ நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னை: ஜாக்டோ ஜியோ நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வந்தன.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிடில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என அரசு இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்காலிக ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு வந்தன.

இதையடுத்து, அரசின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களில் 96 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களும், தொடக்க பள்ளி ஆசிரியர்களில் 79 சதவீதம் பேரும் பணிக்கு திரும்பியுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை கூறியது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எஞ்சிய ஆசிரியர்கள் நேற்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்தது. எனினும், முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கூறியிருந்தனர்.

இந்நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு ஆலோசனை கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் இன்று நடைபெற்றது. அப்போது, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாகவும், நாளை முதல் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பணிக்கு திரும்புவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கைவிட வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.