ஜம் ஜம் புனித நீர் விவகாரம்! மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

 

ஜம் ஜம் புனித நீர் விவகாரம்! மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பும் ஹஜ் பயணிகள் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட சாமான்கள் சலுகை அளவுக்குள் ஜம் ஜம் புனித நீரை கொண்டு வரலாம். மேலும், கடந்த 4ம் தேதி வெளியான அறிக்கையால் ஏற்பட்ட சிரமத்துக்கு எங்களது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என ஏர் இந்தியா கூறியுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக கருதப்படுகிறது சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா. இஸ்லாமியர்களின் செய்ய வேண்டிய 5 முக்கிய கடமைகளில் ஒன்றாக மெக்காவுக்கு புனித யாத்திரை செல்வது உள்ளது. இதனால் உலகின் பல பகுதிகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு செல்கின்றனர். அந்த மெக்காவில் 1400  ஆண்டு பழமையான ஒரு கிணறு உள்ளது. இதில் இன்றும் நீர் ஊறிக் கொண்டே இருக்கிறது. இதனை புனித நீராக கருதுகின்றனர். மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்கள் அந்த புனித நீரை அங்கிருந்து தங்களது குடும்பத்தினருக்காக கொண்டு வருவார்கள்.

ஜம் ஜம் புனித நீர்

இந்தியாவிலிருந்து மெக்காவுக்கு புனித பயணம் செய்பவர்கள் அங்கிருந்து வரும் போது தங்களது குடும்பத்தினருக்காக புனித நீரை கொண்டு வருவார்கள். இந்நிலையில் ஜெட்டாவில் உள்ள ஏர் இந்தியா அலுவலகம் கடந்த 4ம் தேதி அனைத்து டிராவல் ஏஜெண்டுகளுக்கும் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், விமானங்கள் மாற்றம் மற்றும் குறைந்த அளவிலான இருக்கைகள் போன்ற காரணங்களால் செப்டம்பர் 15ம் தேதி வரை விமானங்கள் எண் ஏ.ஐ.966 மற்றும் ஏ.ஐ.964 விமானங்களில் ஜம் ஜம் புனித நீர் பாட்டில்களுக்கு அனுமதி கிடையாது என குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஏர் இந்தியா

இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஏர் இந்தியா தற்போது விளக்கம் கொடுத்துள்ளது. மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பும் ஹஜ் பயணிகள் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட சாமான்கள் சலுகை அளவுக்குள் ஜம் ஜம் புனித நீரை கொண்டு வரலாம். சிரமம் ஏற்பட்டதற்கு தயவு செய்து எங்களது மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று ஏர் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.