ஜம்மு பேருந்து நிலைய குண்டுவெடிப்பு; சிறுவன் உயிரிழப்பு!

 

ஜம்மு பேருந்து நிலைய குண்டுவெடிப்பு; சிறுவன் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பின்னர் நடைபெற்று வரும் சம்பவங்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லை புறங்களில் இந்திய – பாகிஸ்தான் தரப்பில் ஆயுதப் பிரயோகங்கள் நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த பதற்றத்தில் இருந்து அம்மாநில மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், எப்போதும் பரபரப்பாக இயங்கி வரும் ஜம்மு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் நின்றிருந்த பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். குண்டு வெடிப்பு நிகழந்த பேருந்து அருகே நின்று கொண்டிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து, அங்கு விரைந்த போலீசார், அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஹரித்வாரை சேர்ந்த 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.