ஜம்மு பேருந்து நிலைய குண்டு வெடிப்பு; பள்ளி மாணவன் கைது-பரபரப்பு தகவல்கள்!

 

ஜம்மு பேருந்து நிலைய குண்டு வெடிப்பு; பள்ளி மாணவன் கைது-பரபரப்பு தகவல்கள்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பள்ளி மாணவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பள்ளி மாணவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

புல்வாமா தாக்குதலும் அதற்கு பின்னர் நடைபெற்று வரும் சம்பவங்களில் இருந்தும் ஜம்மு – காஷ்மீர் மாநில மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஜம்மு பேருந்து நிலையத்தில் நேற்று மர்ம நபர் ஒருவர் கையெறிக் குண்டு தாக்குதல் நடத்தினார்.

இதனால் அப்பகுதியில் நின்றிருந்த பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். குண்டு வெடிப்பு நிகழந்த பேருந்து அருகே நின்று கொண்டிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

jammu blast

இதனையடுத்து, அங்கு விரைந்த போலீசார், அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி ஹரித்வாரை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 32 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் அம்மாநில போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 9-வது படிக்கும் பள்ளி சிறுவனை கைது செய்துள்ளனர். அவனுக்கு வயது 15. வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த சிறுவனை ஜம்மு-வில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள நக்ரோடா காவல்துறை சோதனைச்சாவடியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

தெற்கு காஷ்மீரின் குல்காம் பகுதியை சேர்ந்த அந்த சிறுவன், தனது மதிய உணவு பெட்டியில், உலர் அரிசிக்கு கீழ் வெடிகுண்டை மறைத்து வைத்து எடுத்துச் சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

யூ-டியூப்-பை பார்த்து எப்படி கையெறி குண்டை வீசுவது என்பது குறித்து அந்த மாணவன் தானே பயிற்சி எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், ஜம்மு-வுக்கு இதுவரை வராத அந்த மாணவனை யார் அழைத்து வந்தது. வாடகை காரில் வந்ததாக கூறப்படுவதால், அந்த காரின் ஓட்டுனர் யார் என்பது குறித்தெல்லாம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.