ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி சிறுமி பலி; மேலும் மூவர் படுகாயம்

 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி சிறுமி பலி; மேலும் மூவர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 2-வது நாளாக ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவையும் பாதிப்படைந்துள்ளது.

பனிப் பொழிவையடுத்து அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் ஜவஹர் சுரங்க பாதை அருகே கடுமையான பனிப்பொழிவு மற்றும் நில சரிவில் சிக்கிய வாகனங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ரஜவுரி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சபீனா கவுசர் என்ற 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அச்சிறுமியின் குடும்பத்தினர் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.