ஜம்மு-காஷ்மீரில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளாட்சித் தேர்தல்; மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

 

ஜம்மு-காஷ்மீரில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளாட்சித் தேர்தல்; மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2005-ஆம் ஆண்டு உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றது. பின்னர் ஏற்பட்ட தொடர் கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் அங்கு தேர்தல் நடதப்படாமல் இருந்தது. இந்நிலையில், ஆளுநர் ஆட்சி நடைபெற்று வரும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நகராட்சி தேர்தல்களையும், பஞ்சாயத்து தேர்தல்களையும் நடத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்தது.

அதன்படி, அக்டோபர்  8,10,13,16-ஆம் தேதிகளில் நகராட்சி அமைப்புகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும், பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் 9 கட்டங்களாக  நடைபெறும் எனவும் அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து, முதற்கட்டமாக 422 வார்டுகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அம்மாநிலத்தின் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன. எனினும், கடும் எதிர்ப்பையும் மீறி அம்மாநிலத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 லட்சத்து 42 ஆயிரத்து 159 வாக்காளர்களுக்காக 584 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள தேர்தலையொட்டி ஜம்மு மாவட்டத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெற்றுவரும் பகுதிகளில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தது வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.