ஜம்மு அண்டு காஷ்மீரில் முதல்முறையாக இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாட்டம்

 

ஜம்மு அண்டு காஷ்மீரில் முதல்முறையாக இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாட்டம்

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முதல் முறையாக இந்த ஆண்டு இந்திய அரசியலமைப்பு தினம் வெகுசிறப்பாக நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு முன்பு வரை அங்கு தனி அரசியலமைப்பு சட்டம் நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கான பணிகள் கடந்த 1946 டிசம்பர் 9ம் தேதி தொடங்கப்பட்டது. 1947 ஆகஸ்ட் 29ம் தேதி அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதுவதற்காக பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டம் 1949 நவம்பர் 26ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1950 ஜனவரி 26ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு தினம்

பி.ஆர். அம்பேத்கர் தலைமையிலான குழு உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்ட நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேசமயம் கடந்த ஆண்டு வரை ஜம்மு அண்டு காஷ்மீரில் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படாமல் இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு அங்கு முதல்முறையாக இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு தினம்

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தாலும், 1957ம் ஆண்டு முதல் காஷ்மீருக்கென தனி அரசியலமைப்பு சட்டம் பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதோடு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இதனையடுத்து அதுவரை அங்கு நடைமுறையில் இருந்த தனி அரசியலமைப்பு சட்டம் ரத்தானது. இதனையடுத்து அங்கு முதல் முறையாக இந்த ஆண்டு இந்திய அரசியலமைப்பு தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

அரசியலமைப்பு தினம்

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவை வளாகத்தில் துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திரா முர்மு தலைமையில் இந்திய அரசியலமைப்பு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திரா முர்மு அரசியலமைப்பின் முன்னுரையை படித்தார். இந்த விழாவில் முக்கிய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.