ஜம்மு அண்டு காஷ்மீரில் தீவிரவாத வன்முறை சம்பவங்கள் 80 சதவீதம் அதிகரிப்பு

 

ஜம்மு அண்டு காஷ்மீரில் தீவிரவாத வன்முறை சம்பவங்கள் 80 சதவீதம் அதிகரிப்பு

ஜம்மு அண்டு காஷ்மீரில் கடந்த ஆண்டில் (2018) தீவிரவாத வன்முறை சம்பவங்கள் முந்தைய ஆண்டைக் (2017) காட்டிலும் 80 சதவீதம் அதிகம் நடந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சகம் 2018-19ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான சம்பவங்கள் தெரியவந்துள்ளது. 2018ல் ஜம்மு அண்டு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வன்முறை சம்பவங்கள் மற்றும் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது முந்தைய ஆண்டைக் காட்டிலும் முறையே 80 மற்றும் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில்  இந்திய எல்லலைக்குள் தீவிரவாதிகள் நிகர ஊடுருவலும் 5 சதவீதம் உயர்ந்தது.

பாதுகாப்பு படையினர்

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஜம்மு அண்டு காஷ்மீரில் 116 வன்முறை சம்பவங்களை தீவிரவாதிகள் நடத்தினர். இதில் 59 பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் 9 பேர் மற்றும் 62 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2018ல் நடந்த 614 தீவிரவாத சம்பவங்களில் 91 பாதுகாப்பு படையினர், 39 பொதுமக்கள் மற்றும் 257 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 1990 முதல் 2019 மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 14,024 பேர் பலியாகினர். மேலும் 5,273 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர்.

தீவிரவாத தாக்குதல்

2018ல் இந்திய எல்லைக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் 328 முறை முயற்சி செய்துள்ளனர். அதில் 143 வெற்றி அடைந்துள்ளது. அதேசமயம் 2017ல் 419 ஊடுருவல் முயற்சிகளை தீவிரவாதிகள் மேற்கொண்ட போதும் அதில் 136ல் மட்டுமே வெற்றி கண்டது என  மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.