ஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் சிக்கித் தவித்த 119 இந்தியர்கள் மீட்பு

 

ஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் சிக்கித் தவித்த 119 இந்தியர்கள் மீட்பு

ஜப்பான் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் சிக்கித் தவித்த 119 இந்தியர்கள் உள்பட 124 பேர் தனி விமானம் மூலம் இன்று டெல்லி அழைத்து வரப்பட்டனர்.

டெல்லி: ஜப்பான் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் சிக்கித் தவித்த 119 இந்தியர்கள் உள்பட 124 பேர் தனி விமானம் மூலம் இன்று டெல்லி அழைத்து வரப்பட்டனர்.

டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பான் துறைமுகத்தில் பயணிகளுடன் நிறுத்தப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்தக் கப்பலில் இருந்த பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.  இதனால் அந்த கப்பலில் இருந்த செய்த பயணிகள் ஜப்பானில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தக் கப்பலில் இருந்த 3700-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு படிப்படியாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 630-க்கும் அதிகமானோர் கப்பலில் இருந்து கீழே இறக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பயணிகள் அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் 132 ஊழியர்கள் 6 பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் இருந்தனர். அவர்களில் 12 பேருக்கு மட்டும் கொரோனா வைரஸ் பரவி இருந்தது. இந்த நிலையில், டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் சிக்கியிருந்த 119 இந்தியர்கள் உள்பட 124 பேர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். மேலும் இதில் இலங்கை, நேபாளம், தென் ஆப்பிரிக்கா, பெரு உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் அடங்குவார்கள். ஜப்பானில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவி செய்த ஜப்பான் அதிகாரிகளுக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.