ஜன.,31-ல் தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்; பிப்.,1-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்

 

ஜன.,31-ல் தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்; பிப்.,1-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 13-ம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 13-ம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் இவை இரண்டும் சேர்த்து பிப்ரவரி முதல் வாரத்திலேயே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2018-19-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த ஆண்டு தாக்கல் செய்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முழுமையாக தாக்கல் செய்த பட்ஜெட் அதுவாகும்.

இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 13-ம் தேதி வரை நடைபெறும் எனவும், பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்யவுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட ஆண்டுக்கான நிதி அறிக்கையின் கண்ணோட்டமாக இருக்கும் இந்த இடைக்கால பட்ஜெட், கிட்டத்தட்ட முழு ஆண்டுக்கான பட்ஜெட் போலவே இருக்கும். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் வரவுள்ளது. அதில், வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பாஜக கைபற்றும் முனைப்பில் இருப்பதால், இந்த பட்ஜெட் மத்திய அரசுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் ஆகும். தேர்தலை மனதில் வைத்து பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது.

அடுத்து அமையவுள்ள புதிய அரசாங்கம், முழுமையான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்பதாலும், தேர்தல் நடைபெறவுள்ள ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் அரசின் வரவு-செலவுகளை தீர்மானிக்கும் இடைக்கால பட்ஜெட் என்பதாலும் இதற்கு ஒப்புதல் பெற வேண்டும்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இடைக்கால பட்ஜெட்டை அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.