சோறுடைத்த சோழநாட்டில் பனங்குருத்து கஞ்சி குடிக்கும் அவலம்

 

சோறுடைத்த சோழநாட்டில் பனங்குருத்து கஞ்சி குடிக்கும் அவலம்

கஜா புயல் நிவாரணங்கள் முழுமையாக சென்றடையாததால், பனங்குருத்து கஞ்சி வைத்து குடிக்கும் அவல நிலைக்கு டெல்டா மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சென்னை: கஜா புயல் நிவாரணங்கள் முழுமையாக சென்றடையாததால், பனங்குருத்து கஞ்சி வைத்து குடிக்கும் அவல நிலைக்கு டெல்டா மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வங்க கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்த போது தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை உருக்குலையச் செய்துள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்து தண்ணீருக்கும், உணவுக்கும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூட தற்போது வரை முழுமையாக சென்றடையவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணிப் பெண்கள், மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண்கள், அவர்களுக்கு உதவ முடியாத கையறு நிலையில் ஆண்கள் என டெல்டா மக்கள் பெரும் சிரமத்தில் இருந்து வருகின்றனர்.

ஆனால், இது குறித்தெல்லாம் தமிழக அரசு எந்த கவலையும் படுவதில்லை என்றும், டெல்டா மக்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் கடுமையாக கொந்தளித்து வருகின்றனர். முதலமைச்சர் பழனிசாமி இதுவரை அப்பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், பசி தாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு கிராம மக்கள், சாலையிலேயே தற்காலிக அடுப்பு அமைத்து, பனை ஓலை, பனங்குருத்து போட்டு கஞ்சி சமைத்து சாப்பிட்டுள்ளனர். இது குறித்து புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றியுள்ள ஒருவர், “பசிக்குது சாப்பாடு இல்ல வேற வழி தெறியல அதான் பனை ஓலை பனங்குருத்து போட்டு கஞ்சி வைச்சு குடிக்க போறோம்.. ஓட்டு கேட்டு வாங்கடா செருப்ப கழட்டி அடிக்கிறோம்..” என தன் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

‘சோறுடைத்து பசி ஆற்றிய சோழ வளநாடு’ என போற்றப்படும் சோழ மண்ணில் இது போன்ற அவலநிலை ஏற்பட்டுள்ளதை நினைத்து சமூகவலைதளங்களில் பலரும் தங்கள் வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர்.