சோனியா காந்தி தலைமையில் இன்று எதிர்க்கட்சிகள் தலைவர்கள் சந்திப்பு: குடியரசு தலைவரை சந்திக்க முடிவா?

 

சோனியா காந்தி தலைமையில் இன்று எதிர்க்கட்சிகள் தலைவர்கள் சந்திப்பு: குடியரசு தலைவரை சந்திக்க முடிவா?

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பதில் நடவடிக்கைகளை திட்டமிடுவது தொடர்பாக சோனியா காந்தி தலைமையில் எதிர்கட்சி தலைவர்களின் சந்திப்பு நடைபெற உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கட்சிகளை கடுமையாக எதிர்த்து வருகின்றன. நாடு முழுவதும் மக்களை திரட்டி அந்த சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனால் அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாத மத்திய அரசு, குடியுரிமை திருத்த சட்டம் கடந்த 10ம் தேதி முதல் அமலுக்கு வந்தாக கடந்த சில தினங்களுக்கு இந்திய அரசிதழில் வெளியிட்டது.

எதிர்க்கட்சி தலைவர்கள்

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்தபோது,  மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை திட்டமிட எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்து இருந்தார். அதன்படி, டெல்லியில் இன்று மதியம் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், திமுக, இடது சாரிகள், ஆர்.ஜே.டி., சமாஜ்வாடி உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். அதேசமயம் இந்த கூட்டத்தில் பங்கேற்கபோவதில்லை என மம்தா பானர்ஜி ஏற்கனவே அறிவித்து விட்டார். பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இந்த கூட்டத்தில் பங்கேற்பாரா இல்லையா என்பது இன்னும் சஸ்பென்ஸாகவே உள்ளது.

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்

இன்று நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் ஆகியவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என தெரிகிறது. அதேசமயம் இன்று குடியரசு தலைவரை சந்தித்து, குடியுரிமை திருத்த சட்டம்-தேசிய மக்கள்தொகை பதிவு ஆகியவை குறித்த தங்களது கருத்து அறிக்கையை அளிப்பது தொடர்பாக முடிவு செய்வார்களாக என்பது குறித்து சரியாக தெரியவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.