சொந்தமாக பிராசஸர்கள் உருவாக்குவதில் ஆப்பிள் நிறுவனம் தீவிரம்

 

சொந்தமாக பிராசஸர்கள் உருவாக்குவதில் ஆப்பிள் நிறுவனம் தீவிரம்

தனக்கென சொந்தமாக பிராசஸர்களை உருவாக்கும் பணிகளை ஆப்பிள் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.

கலிபோர்னியா: தனக்கென சொந்தமாக பிராசஸர்களை உருவாக்கும் பணிகளை ஆப்பிள் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனக்கென சொந்தமாக பிராசஸர் மற்றும் வயர்லெஸ் உபகரணங்களை உற்பத்தி செய்யும் நோக்கில் பொறியாளர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எதிர்கால ஐபோன் மாடல்களுக்கான சிப்செட்களை உற்பத்தி செய்ய குவால்காம் நிறுவனத்திற்கு வாய்ப்புகள் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாதத்தில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் பத்து வேலைவாய்ப்பு தகவல்களை சான் டியாகோவில் பணியாற்ற பதிவிட்டுள்ளது. பிராசஸர் வடிவமைப்புக்காக தெற்கு கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனம் வெளிப்படையாக ஆட்களை தேர்வு செய்திருப்பது இது தான் முதல்முறை.

சிப் உபகரணங்கள், ஆப்பிள் நியூரல் என்ஜின் செயற்கை நுண்ணறிவு பிராசஸர் மற்றும் வயர்லெஸ் சிப்செட்களில் பணியாற்றும் திறனை பொறியாளர்கள் கொண்டிருக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவன விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வயர்லெஸ் உபகரணங்களில் உருவாக்க வன்பொருள் மற்றும் மென்பொருள் பொறியாளர்களை பணியமர்த்த ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

பிராசஸர்களை தானே உருவாக்குவதன் மூலம் போட்டி நிறுவனங்களின் சாதனங்களை விட ஆப்பிள் ஃபிளாக்ஷிப் சாதனங்களின் செலவினங்களை குறைக்க முடியும் என்பதால் ஆப்பிள் நிறுவனம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக  கருதப்படுகிறது. ஆப்பிள் பணியமர்த்த இருக்கும் பொறியாளர்கள் எல்.டி.இ. மற்றும் ப்ளூடூத் போன்ற ப்ரோடோகால்களில் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது.