சொந்தமாக ஒரு கார் கூட கிடையாது…. ஆனால் ரூ.143 கோடிக்கு சொத்து இருக்கு… உத்தவ் தாக்கரே வேட்புமனுவில் தகவல்…

 

சொந்தமாக ஒரு கார் கூட கிடையாது…. ஆனால் ரூ.143 கோடிக்கு சொத்து இருக்கு… உத்தவ் தாக்கரே வேட்புமனுவில் தகவல்…

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மேலவை உறுப்பினர் தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்புமனுவில், மொத்தம் ரூ.143 கோடிக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவை பொறுத்தவரை தாக்கரே மற்றும் பவார் குடும்பத்தை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பவார் குடும்பம் பல ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது. அதேசமயம் தாக்கரே குடும்பமோ சமீபத்தில்தான் நேரடி அரசியலுக்கு நுழைந்துள்ளது. அதுவும் பால் தாக்கரேவின் பேரன் ஆதித்யா தாக்கரேதான் முதல் முதலாக நேரடி அரசியில் இறங்கினார். அதன் பிறகு எதிர்பாராத விதமாக உத்தவ் தாக்கரே நேரடி அரசியலில் இறங்கினார். பொதுவாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் தாக்கரே குடும்பத்தை காட்டிலும் பவார் குடும்பத்தின்  சொத்து மதிப்பு அதிகமாக இருக்கும் என பலரும் நினைப்பர்.

சரத் பவார்

ஆனால் பவார் குடும்பத்தை காட்டிலும் தாக்கரே குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 5 மடங்கு அதிகம் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்புமனுவில் சரத் பவார் தனது மற்றும் தனது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.32.73 கோடி என தகவல் தெரிவித்து இருந்தார். அதேசமயம் உத்தவ் தாக்கரேவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மொத்தம் ரூ.141.68 கோடிக்கு சொத்து உள்ளது. சரத் பவாருக்கும், உத்தவ் தாக்கரேவுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்னன்னா இருவருக்கும் சொந்தமாக வாகனம் எதுவும் கிடையாது.

முதல்வர் உத்தவ் தாக்கரே வேட்புமனு தாக்கல் செய்தபோது

மகாராஷ்டிராவில் காலியாக ஒன்பது சட்ட மேலவை உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 21ம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது. மேலவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். அந்த பிரமாண பத்திரத்தில் தனக்கும், தனது குடும்பத்துக்கும் மொத்தம் ரூ.141.68 கோடிக்கும் சொத்து இருப்பதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பில் அசையா சொத்து ரூ.81.37 கோடியும், அசையும் சொத்து ரூ.60.31 கோடியும் அடங்கும். அந்த பிரமாண பத்திரத்தில் உத்தவ் மற்றும் அவரது மனைவி ரேஷ்மிக்கும் மொத்தம் ரூ.15.50 கோடிக்கு கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.