சைக்கிளை ரிப்பேர் பார்க்காமல் டிமிக்கி கொடுத்த கடைக்காரர்! காவல் நிலையத்தில் புகார் கொடுத்த 10 வயது கேரள சிறுவன்…

 

சைக்கிளை ரிப்பேர் பார்க்காமல் டிமிக்கி கொடுத்த கடைக்காரர்! காவல் நிலையத்தில் புகார் கொடுத்த 10 வயது கேரள சிறுவன்…

கேரளாவில் சைக்கிள்களை ரிப்பேர் பார்க்காமல் டிமிக்கி கொடுத்து வந்த கடைக்காரர் மீது 10 வயது சிறுவன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் தற்போது வைரலாகி உள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள மெப்பயூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் அபின். 5ம் வகுப்பு படிக்கும் அபினும், அவரது சகோதரனும் கடந்த செப்டம்பர் 5ம் தேதி தங்களது சைக்கிள்களை பழுதுபார்ப்பதற்காக அந்த பகுதியில் உள்ள சைக்கிள் கடையில் விட்டுள்ளனர். மேலும் சைக்கள் ரிப்பேர் செலவுக்காக கடைக்காரரிடம் முன்பணமாக ரூ.200ம் கொடுத்துள்ளனர். 

உள்படத்தில் சிறுவன் அபின்

ஆனால் சைக்கிள் கடைக்காரர் சொன்ன நேரத்தில் சைக்கிள்களை ரிப்பேர் பார்த்து சிறுவர்களிடம் கொடுக்கவில்லை. இதனையடுத்து  இது தொடர்பாக சைக்கிள் கடைக்காரருக்கு போன் செய்து அடிக்கடி கேட்டுள்ளனர். சில சந்தர்ப்பங்களில் சிறுவனின் போன் அழைப்பை கடைக்காரர் தவிர்த்துள்ளார். இதனையடுத்து பலமுறை சைக்கிள் கடைக்கு சிறுவர்கள் சென்றனர். ஆனால் கடை பூட்டி கிடந்தது. 

அபின் கொடுத்த புகார்

இப்படி 2 மாதங்களுக்கு மேல் கடந்து விட்டது. இதனையடுத்து கடந்த 25ம் தேதியன்று மெப்பயூர் காவல் நிலையத்துக்கு சென்ற சிறுவன் அபின், ஒரு நோட் பேப்பரில், சைக்கிள் ரிப்பேர் பார்க்க கொடுத்த விவரத்தையும், கடைக்காரர் இன்னும் சைக்கிள்களை ரிப்பேர் பார்த்த தராத தகவலையும் தெரிவித்து கடைக்காரரிடமிருந்து சைக்கிள்களை திரும்ப பெற உதவும்படி மலையாளத்தில் எழுதி போலீசாரிடம் புகார் கொடுத்தான்.

சிறுவன் அபின்

சிறுவனிடம் புகாரை பெற்ற போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். சம்பந்த கடைக்காரரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். உடல் நலம் சரியில்லாதது மற்றும் மகனின் திருமண வேலையால் கடையை சரியாக திறக்க முடியவில்லை. இன்னும் 2 நாட்களில் சைக்கிள்களை ரிப்பேர் பார்த்து சிறுவர்களிடம் கொடுப்பதாக போலீசாரிடம் அவர் உறுதி அளித்தார். சைக்கிள்களை ரிப்பேர் பார்த்து தராத கடைக்காரர் மீது சிறுவன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் தற்போது வைரலாகி உள்ளது.