சேலத்தில் இரண்டு ஆம்னி பேருந்துகள் மோதி கோர விபத்து – 6 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலி

 

சேலத்தில் இரண்டு ஆம்னி பேருந்துகள் மோதி கோர விபத்து – 6 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலி

சேலம் மாவட்டத்தில் இரண்டு ஆம்னி பேருந்துகள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம்: சேலம் மாவட்டத்தில் இரண்டு ஆம்னி பேருந்துகள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேபாளத்தை சேர்ந்த 33 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு, பின்னர் அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஆம்னி பேருந்தில் புறப்பட்டனர். நள்ளிரவு 1 மணி அளவில் சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூர் நரிப்பள்ளம் பகுதியில் அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அருகில் உள்ள ஒரு மாரியம்மன் கோவில் மண்டபத்தில் இரவு தங்கி விட்டு, அங்கிருந்து காலையில் புறப்பட்டு செல்லலாம் என்று பேருந்தில் இருந்தவர்கள் முடிவு செய்தனர்.

ttn

இதைத் தொடர்ந்து நரிப்பள்ளம் தேசிய நெடுஞ்சாலையில் எதிர்புற சாலையில் செல்ல ஓட்டுனர் யூடர்ன் எடுத்து திருப்பினார். அப்போது பெங்களூருவில் இருந்து கேரள மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்த மற்றொரு ஆம்னி பேருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்தின் நடுப்பகுதியில் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இதனால் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து கவிழ்ந்தது. பேருந்துக்குள் இருந்த பயணிகள் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் வலியால் அலறித் துடித்தனர்.

இந்த விபத்தை நேரில் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கும், ஆம்புலன்ஸ் குழுவினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனே அங்கு விரைந்து சென்ற ஓமலூர் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்து காரணமாக சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.