சேற்றை எடுத்து வைத்தாவது செந்தாமரையை மலர வைப்போம்: தமிழிசை ஆவேசம்

 

சேற்றை எடுத்து வைத்தாவது செந்தாமரையை மலர வைப்போம்: தமிழிசை ஆவேசம்

மேகதாது அணை விவகாரத்தில் பல கட்சிகள் அரசியல் செய்வதாக தமிழிசை சுந்தரராஜன் குற்றம் சுமத்தியுள்ளார்.

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் பல கட்சிகள் அரசியல் செய்வதாக தமிழிசை சுந்தரராஜன் குற்றம் சுமத்தியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கான, முதற்கட்ட ஆய்வை மேற்கொள்வதற்காக மத்திய அரசிடம் கர்நாடகா அனுமதி கோரியிருந்தது. மத்திய அரசும் கர்நாடகாவிற்கு ஆய்வை மேற்கொள்ள அனுமதி வழங்கியது.

ஒருவேளை, மேகதாதுவில் கர்நாடக அரசு அணையைக் கட்டிவிட்டால், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களுக்குத் தண்ணீர் வரத்து குறைந்துவிடும். இதனால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

மத்திய அரசின் இந்த ஒருதலை பட்சமான முடிவை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும், மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்றும் விரைவில் அதற்கான ஆய்வு பணிகள் தொடங்கப்படும் என்றும் கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “மேகதாது அணை கட்டுவதில் தமிழக பாரதிய ஜனதாவுக்கு ஒப்புதல் இல்லை. மேகதாது பற்றி பாஜகவுக்கு கவலை இல்லை என ஸ்டாலின் கூறி வருகிறார். பல கட்சிகள் இதை அரசியலாக்க முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என பேசியுள்ளார்.

மேலும், புல் பூண்டு கூட முளைக்காத இடத்தில் தாமரை எப்படி மலரும் என சிலர் பேசுகிறார்கள். எங்கள் மீது வீசப்படும் சேற்றை எடுத்து வைத்தாவது செந்தாமரை மலர வைப்போம் என ஆவேசமாகக் கூறியுள்ளார் தமிழிசை.