“செருப்பை கழற்ற சொன்னதால் அவமானமாக இருந்தது” : திண்டுக்கல் சீனிவாசன் மீது பழங்குடியின சிறுவன் போலீசில் புகார்!

 

“செருப்பை கழற்ற சொன்னதால் அவமானமாக இருந்தது” : திண்டுக்கல் சீனிவாசன் மீது பழங்குடியின சிறுவன் போலீசில் புகார்!

இந்த சம்பவத்தின் போது  எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகள் புத்துணர்வு முகாமை  தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருகை புரிந்தார். அப்போது   புல்வெளியில் நடந்து சென்று கொண்டிருந்த திண்டுக்கல்  சீனிவாசன் செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. அப்போது அங்கிருந்த பழங்குடியின சிறுவனை சீனிவாசன், டேய்  வாடா வாடா செருப்பை கழற்றிவிடுடா என்று கூறி அழைக்கிறார். அப்போது அந்த சிறுவன் அங்கு வந்து அமைச்சர் சீனிவாசன் செருப்பை கழற்றிவிடுகிறார்.  அப்போது அமைச்சருடன்  நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகிய அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த சம்பவத்தின் போது  எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

ttn

இதுகுறித்து விளக்கமளித்த திண்டுக்கல் சீனிவாசன், ‘சிறுவனை செருப்பை கழற்ற சொன்னதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. பெரியவர்களை அழைத்தால் தவறாகிவிடும் என்பதால் தான்  பேரன் போல  நினைத்து தான் அவ்வாறு செய்ய சொன்னேன். இருப்பினும் இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பழங்குடியின  சிறுவன் கேத்தன் தெப்பகாடு பகுதி  மக்களுடன் சென்று மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், “6.2.2020 காலை தெப்பக்காடு யானைகள் புத்துணர்வு முகாம் தொடக்க நிகழ்ச்சியில்  கலந்துகொள்ள வனத்துறை அமைச்சர் சீனிவாசன், நீலகிரி மாவட்ட ஆட்சியர், அரசியல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரும் வந்தனர். அப்போது அங்கிருந்த விநாயகர் கோவில் முன்பாக கூட்டத்தில் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்து, அமைச்சர் சீனிவாசன் “டேய் வாடா, வாடா, இங்க வாடா” என்று கையசைத்துக் கூப்பிட்டுக் காலில் உள்ள “செருப்பை கழட்டுடா” என்று என்னிடம் கூறினார். நன் அமைச்சர் மற்றும் உயரதிகாரிகள் இருப்பதால் அவர் காலிலிருந்த செருப்பை கழற்றிவிட்டேன். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் அதை வேடிக்கை பார்த்தனர். அங்கு கூடியிருந்த அனைவரும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அமைச்சர்  உள்பட அனைவர்க்கும் தெரியும். அனைவரின் முன்பும் என்னை இவ்வாறு செய்ய சொன்னது பயத்துடன் வேதனையை அளித்தது.

yttn

சிலமணிநேரங்களில் எல்லா  டிவியிலும் நான் செருப்பை கழற்றிவிடும் காட்சி  ஒளிபரப்பாகியது எனக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. என்னை மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள் என்ற பயத்தில் வீட்டிலேயே இருந்தேன். பின்னர் எனது பெற்றோரும் ஆதிவாசிகள் முன்னேற்ற சங்கத்தினரும்  எனக்கு ஆறுதல் கூறி தேற்றினார்கள். அதனால் தற்போது புகார் கொடுக்கும் மனத்திடத்திற்கு வந்தேன். எனவே தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2015ன் கீழ் சட்டப்படி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது  நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் எனக்கும் என் குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும்” என்று புகாரில் கூறியுள்ளார். 

இதை தொடர்ந்து மாணவர் கேத்தனிடம் புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், விசாரணைக்காக இன்று காலை காவல்நிலையத்திற்கு வரச்சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.