செய்வினையை எடுத்து தருவதாக கூறி ரூ. 1லட்சம் மோசடி செய்த கும்பல்

 

செய்வினையை எடுத்து தருவதாக கூறி ரூ. 1லட்சம் மோசடி செய்த கும்பல்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி அருகே வீட்டில் செய்வினை வைக்கப்பட்டுள்ளதாக கூறி பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திப்பம்பட்டி என்ற கிராமத்திலுள்ள பழனியம்மாள் வீட்டிற்கு சென்ற ஒருவர், சாமியார் எனக்கூறி அறிமுகம் செய்துள்ளார். அதன்பின் பழனியம்மாள் வீட்டில் செய்வினை இருப்பதாகவும், அதை எடுக்கவில்லை என்றால், பழனியம்மாளின் மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறி அச்சமடைய செய்துள்ளார். அதனை அறியாமை காரணமாக பழனியம்மாளும் நம்பியுள்ளார். மேலும் வீட்டில் புதையல் இருப்பதாகவும், செய்வினையை எடுத்தால்தான் அந்த புதையலை எடுக்க முடியும் என்றும் ஆசை வார்த்தைக் கூறியுள்ளார். 

செய்வினை

இதனை உண்மை என நம்பிய பழனியம்மாள்  செய்வினையை எடுப்பதற்காக முதலில் 10 ஆயிரமும் 2-வது முறையாக 50 ஆயிரமும் 3-வது முறை வீட்டிலிருந்த நகைகளை அடகு வைத்து 45 ஆயிரம் ரூபாயும் வங்கி கணக்கு மூலம் போலி சாமியாருக்கு அனுப்பியுள்ளார். கடந்த 25 ஆம் தேதி பழனியம்மாள் வீட்டிற்கு வந்த அந்த சாமியார், செய்வினையை எடுப்பதற்கு தனக்கு உதவி செய்ய 2 பேர் வேண்டும் என்றும், அவர்களுக்கு சம்பளம் கொடுக்க 50 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்றும் பழனியம்மாளிடம் கூறியுள்ளார். 

இதனால் சந்தேகம் அடைந்த பழனியம்மாள், செய்வினை எடுத்த பிறகு பணம் தருவதாக கூறி சமாளித்துள்ளார். போலி சாமியார் உதவிக்காக இருவரை அழைத்து வர சென்ற நேரத்தில், மத்தூர் போலீசாருக்கு பழனியம்மாள் தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மூன்று பேரையும் கையும் களவுமாக பிடித்து சென்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செய்வினை பெயரை பயன்படுத்தி பணம் பறித்தது கண்டுபிடிக்கப்பட்டது.  விசாரணையில் சுரேஷ் (27), சிவா (33), செந்தில் குமார் (38) ஆகியோர் தான் நூதன முறையில் ஏமாற்றியதும் தெரியவந்தது.