செப்டம்பர் காலாண்டில் மட்டும் ரூ.8 ஆயிரம் கோடி லாபம் பார்த்த டி.சி.எஸ்.

 

செப்டம்பர் காலாண்டில் மட்டும் ரூ.8 ஆயிரம் கோடி லாபம் பார்த்த டி.சி.எஸ்.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.8,042 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது செப்டம்பர் காலாண்டின் நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) நிறுவனம் நேற்று தனது செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. அந்நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

டி.சி.எஸ். அலுவலகம்

இந்த நிதியாண்டின் 2வது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிகர லாபமாக ரூ.8,042 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 1.78 சதவீதம் அதிகமாகும். 2018 செப்டம்பர் காலாண்டில் அந்நிறுவனத்துக்கு ரூ.7,901 கோடிதான் நிகர லாபமாக கிடைத்து இருந்தது. மேலும் 2019 செப்டம்பர் காலாண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.38,977 கோடியாக உயர்ந்தது.

பணம்

டி.சி.எஸ். நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் புதிதாக மொத்தம் 14,097 பணியாளர்களை நியமனம் செய்துள்ளது. 2019 செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 4.50 லட்சமாக உள்ளது. மேலும், பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு இரண்டாவது இடைக்கால டிவிடெண்டாக ரூ.5ம், சிறப்பு டிவிடெண்டாக ரூ.40ம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.