சென்னை விமான நிலையத்தில் 5 திரையரங்குகள் – பி.வி.ஆர் சினிமாஸ் திட்டம்

 

சென்னை விமான நிலையத்தில் 5 திரையரங்குகள் – பி.வி.ஆர் சினிமாஸ் திட்டம்

சென்னை விமான நிலையத்தில் 5 திரையரங்குகளை அமைக்க பிரபல சினிமா நிறுவனமான பி.வி.ஆர் திட்டமிட்டுள்ளது.

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 5 திரையரங்குகளை அமைக்க பிரபல சினிமா நிறுவனமான பி.வி.ஆர் திட்டமிட்டுள்ளது.

விமான நிலையங்களில் பயணிகள் தங்கள் விமானத்திற்காக காத்திருக்கும்போது சில சமயங்களில் அது பலமணி நேரங்களாக நீடித்து விடுகிறது. விமானத்தின் தாமதம், தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பயணிகள் விமான நிலையத்திலேயே சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியதாக உள்ளது. அந்த சமயங்களில் அவர்கள் பொழுதை கழிக்கும் வகையில் விமான நிலையத்துக்குள்ளேயே திரையரங்குகள் இருந்தால் நன்றாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு சென்னை விமான நிலையத்துக்குள் 5 நவீன திரையரங்குகளை அமைக்க பிரபல பி.வி.ஆர் சினிமாஸ் திட்டமிட்டுள்ளது.

airport / ttn

சர்வதேச தரத்தில் பல அடுக்கு கார் பார்க்கிங் வசதியுடன் இந்த திரையரங்குகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 1000 பேருக்கு மேல் இந்த ஐந்து அரங்குகளில் படம் பார்த்து மகிழ முடியும் என்று பி.வி.ஆர்.நிறுவன அதிகாரி பிரமோத் அரோரா கூறியுள்ளார்.

அத்துடன் உணவு மற்றும் குளிர்பானங்கள் கிடைக்கும் வகையில் இந்த திரையரங்குகள் நிர்மாணிக்கப்பட உள்ளன. அடுத்தாண்டு இதன் பணிகள் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.15 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சினிமா திரையரங்க துறையில் முதன்மையாக திகழும் இந்நிறுவனம் 50 நகரங்களில் 584 திரைகளை வைத்துள்ளது. மேலும் அந்த எண்ணிக்கையை 2000-ஆக உயர்த்தும் முயற்சியில் பி.வி.ஆர் சினிமாஸ் ஈடுபட்டுள்ளது.