சென்னை- நாகை இடையே கரையை கடக்கும் கஜா புயல்: மிக கனமழை பெய்ய வாய்ப்பு!

 

சென்னை- நாகை இடையே கரையை கடக்கும் கஜா புயல்: மிக கனமழை பெய்ய வாய்ப்பு!

தீவிர புயலாக வலுப்பெற்று வரும் கஜா புயல்  சென்னை – நாகப்பட்டினம் இடையே வரும் 15-ம் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தீவிர புயலாக வலுப்பெற்று வரும் கஜா புயல்  சென்னை – நாகப்பட்டினம் இடையே வரும் 15-ம் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி 10 நாட்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், தற்போது தான் முதல் புயல் உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இப்புயலுக்கு இலங்கை பரிந்துரைத்த பெயரான கஜா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.கஜா என்றால் யானை என்று பொருள்படும். 

நேற்றிரவு நிலவரப்படி இப்புயல் மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 880 கிலோ மீட்டர் தொலைவிலும் இப்புயல் மையம் கொண்டுள்ளது. வரும் 24 மணி நேரத்தில் வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும் கஜா பின்னர் வலுக்குறைந்த நிலையில் சென்னை – நாகை இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதே நேரத்தில் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மிக கனமழை முதல் அதி கனமழை வரையிலும் பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமான மழை பெய்யக் கூடும் என அறிவித்துள்ளது.