சென்னையில் இன்று தொடங்குகிறது உலக முதலீட்டாளர்கள் மாநாடு

 

சென்னையில் இன்று தொடங்குகிறது உலக முதலீட்டாளர்கள் மாநாடு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது. மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார்

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது. மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார்.

தமிழகத்துக்கு அன்னிய முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்வதற்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் ஜனவரி 23 (இன்று), 24-ம் (நாளை) தேதிகளில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதற்காக அமைச்சரவையும் 3 முறை கூடி முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், தொழில் நிறுவனங்கள் புதிதாக தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார். காலை 10 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு ‘தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை -2019’-ஐ வெளியிட்டு பேசுகிறார். நாளை மதியம் மதியம் 3 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. தலைமை விருந்தினராக குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசுகிறார்.

அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. இரண்டு நாள்கள் நடைபெறும் மாநாட்டின் மூலம் ரூ.2.55 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.