சென்செக்ஸ் 289 புள்ளிகள் வீழ்ச்சி! நிப்டி 104 புள்ளிகள் இறங்கியது!

 

சென்செக்ஸ் 289 புள்ளிகள் வீழ்ச்சி! நிப்டி 104 புள்ளிகள் இறங்கியது!

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 289 புள்ளிகள் குறைந்தது.

சர்வதேச தர நிர்ணய நிறுவனமான மூடிஸ், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் மாதங்களில் குறைவாக இருக்கும் என எச்சரிக்கை செய்துள்ளது. இதுதவிர பல முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் இருந்ததால் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. 

சந்தை வீழ்ச்சி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல், டி.சி.எஸ்., ஐ.டி.சி., எல் அண்டு டி உள்பட 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், யெஸ் பேங்க், இண்டஸ்இந்த் வங்கி, ஹீரோமோட்டோ கார்ப், சன்பார்மா மற்றும் ஸ்டேட் வங்கி உள்பட 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தையில் இன்று 565 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,947 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 111 நிறுவன பங்குகளின் விலை எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.66 லட்சம் கோடியாக குறைந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்த போது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.142.48 லட்சம் கோடியாக இருந்தது.

இன்று வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 289.13 புள்ளிகள் இறங்கி 37,397.24 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்  நிப்டி 103.80 புள்ளிகள் குறைந்து 11,085.40 புள்ளிகளில் நிலை கொண்டது.