சென்செக்ஸ் 10 புள்ளிகள் உயர்ந்தது! நிப்டி 3 புள்ளிகள் சரிந்தது!

 

சென்செக்ஸ் 10 புள்ளிகள் உயர்ந்தது! நிப்டி 3 புள்ளிகள் சரிந்தது!

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் கடும் ஏற்ற இறக்கத்தில் இருந்தது. சென்செக்ஸ் 10 புள்ளிகள் உயர்ந்த நிலையில், நிப்டி 3 புள்ளிகள் குறைந்தது.

மத்திய பட்ஜெட்டின் தாக்கம் இன்றும் பங்குச் சந்தைகளில் இருந்தது. மேலும், அமெரிக்க பங்குச் சந்தைகளின் சரிவும் இந்தி பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. இதனால் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 300 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது. இருப்பினும், கடந்த 2 வர்த்தக தினங்களாக பல முன்னணி நிறுவனங்களின் பங்குகளின் விலை கடுமையாக சரிந்து இருந்ததால் அந்த பங்குகளை வாங்கி குவித்தனர். இதனால் பங்கு வர்த்தகத்தில் பெரிய சரிவு தடுத்து நிறுத்தப்பட்டது. 

பங்கு வர்த்தகம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் பஜாஜ் பைனான்ஸ், சன்பார்மா, ஹீரோமோட்டோகார்ப், எல் அண்டு டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஸ்டேட் வங்கி உள்பட 15  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், டி.சி.எஸ்., ஐ.டி.சி., யெஸ் பேங்க், மாருதி, ஏசியன்பெயிண்ட்ஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,178 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,263 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதேசமயம் 161 நிறுவன பங்குகளின் விலை எந்தவிதமாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.148.02 லட்சம் கோடியாக உயர்ந்தது. அதேசமயம், நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு நேற்று ரூ.147.96 லட்சம் கோடியாக இருந்தது.

பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 10.25 புள்ளிகள் உயர்ந்து 38,730.82 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 2.70 புள்ளிகள் குறைந்து 11,555.90 புள்ளிகளில் முடிவுற்றது.