சூப்பர் ஓவருக்கும் எங்களுக்கும் ராசியே இல்லை – நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விரக்தி

 

சூப்பர் ஓவருக்கும் எங்களுக்கும் ராசியே இல்லை – நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விரக்தி

ஹாமில்டன்: ஒருபோதும் சூப்பர் ஓவர் எங்களுக்கு சரியாக அமைந்தது இல்லை என்று நியூசிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து –  நியூசிலாந்து அணிகள் விளையாடின. அந்தப் போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதுவும் சமனில் முடிந்ததால் பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இந்தியாவுக்கு எதிராக நடந்த 3-வது டி20 போட்டியும் சமனில் முடிந்ததை தொடர்ந்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. ரோகித் ஷர்மாவின் கடைசி 2 அட்டகாச சிக்ஸர்களால் இந்திய அணி போட்டியை வென்றதோடு, டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது. மேலும் இந்தியாவுக்கு எதிராக முதன்முறையாக சொந்த மண்ணில் டி20 தொடரை அந்த அணி இழந்துள்ளது.

ttn

இந்நிலையில், போட்டி முடிந்ததும் பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஒருபோதும் சூப்பர் ஓவர் எங்களுக்கு சரியாக அமைந்தது இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், ‘‘சூப்பர் ஓவர் முறை எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. எனவே கூடுமானவரை சூப்பர் ஓவருக்கு போகாமலேயே போட்டியை முடிக்க முயற்சி செய்வது அவசியம். இந்தப் போட்டியில் கிரிக்கெட்டின் அனைத்துத் துறையிலும் சிறப்பாக செயல்பட்டோம். இந்திய அணி அபாரமான தொடக்கத்தை பெற்ற பிறகு, சிறப்பாக பந்துவீசி கட்டுப்படுத்தினோம். இவ்வளவு முயற்சி செய்து விளிம்பில் வந்து தோல்வியை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் நூலிழையில் தான் வெற்றியை பறிகொடுத்தோம். கடைசி மூன்று பந்துகளில், இந்திய அணியின் அனுபவத்தை நாங்கள் கண்கூடாக பார்த்தோம். அவர்களிடம் இருந்து வீரர்கள் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும்’’ என்றார்.