சுரங்க பணிக்காக நிலம் எடுக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

 

சுரங்க பணிக்காக நிலம் எடுக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சுரங்க பணிக்காக என்.எல்.சி நிர்வாகம் நிலம் எடுக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: சுரங்க பணிக்காக என்.எல்.சி நிர்வாகம் நிலம் எடுக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) மூன்றாவது சுரங்கம் அமைக்க விருத்தாசலம், புவனகிரி வட்டங்களில் உள்ள 37 கிராமங்களில் சுமார் 13 ஆயிரம் ஏக்கர் விளை நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கடலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், என்.எல்.சி நிர்வாகமும் சேர்ந்து நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் விவசாயிகளும், பொதுமக்களும் நிலம் எடுப்பு முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த காலத்தில் நிலக்கரி சுரங்கங்களுக்கான கையகப் படுத்தப்பட்ட நிலப்பரப்பில் இன்றும் 10 ஆயிரம் ஏக்கர் பயன்படுத்தபடாமல் இருக்கிறது. இந்த நிலம் எடுக்கப்பட்ட காலத்தில் மாற்று வீட்டுமனை நிலம், வேலைவாய்ப்பு வழங்கப்படும் என என்எல்சி நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால் அதன்படி நடந்து கொள்ளவில்லை. மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையும் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது.

மாற்று மனையிடத்தில் குடியேறியவர்களுக்கு இதுவரை மனைப்பட்டா வழங்கப்படவில்லை. ஒரு ஏக்கர் நிலத்தில் 127 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி வெட்டி எடுக்கும் என்எல்சி விவசாயிகளையும், அருகில் குடியிருப்போர்களையும் வஞ்சிப்பது சரியல்ல. இந்த நிலையில் என்எல்சி நிர்வாகம் 3 வது சுரங்கப் பணிக்காக நிலம் எடுக்கும் திட்டத்தை நிறுத்திவைத்து, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என கூறியுள்ளார்.