சுமார் 3.6 கோடி வாடிக்கையாளர்கள் அவுட்…வோடபோன் ஐடியா நிறுவனம் அதிர்ச்சி!

 

சுமார் 3.6 கோடி வாடிக்கையாளர்கள் அவுட்…வோடபோன் ஐடியா நிறுவனம் அதிர்ச்சி!

வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் 3.6 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக டிராய் அறிக்கை மூலமாக தெரிய வந்துள்ளது.

மும்பை: வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் 3.6 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக டிராய் அறிக்கை மூலமாக தெரிய வந்துள்ளது.

செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கை தொடர்பான அறிக்கையை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சமீபத்தில் வெளியிட்டது. அதாவது கடந்தாண்டு நவம்பர் காலகட்டம் வரையிலான தரவுகளை மையப்படுத்தி அந்த அறிக்கை இருந்தது. அந்த அறிக்கையை வைத்துப் பார்க்கும்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய டெலிகாம் துறையில் தொடர்ந்து கோலோச்சி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. நவம்பர், 2019 வரை முன்னணி டெலிகாம் நிறுவனங்களின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கீழ்வருமாறு:

1.ரிலையன்ஸ் ஜியோ – 369.93 மில்லியன்

2.வோடபோன் ஐடியா – 336.26 மில்லியன்

3.பார்தி ஏர்டெல் – 327.3 மில்லியன்

மேற்கண்ட எண்ணிக்கையை வைத்து பார்க்கும்போது இந்திய டெலிகாம் துறையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 32.04 சதவீதமும், வோடபோன் ஐடியா நிறுவனம் 29.12 சதவீதமும், பார்தி ஏர்டெல் நிறுவனம் 28.35 சதவீதமும் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளன. மேலும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை கணிசமாக கூட்டி வரும் நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. அந்நிறுவனம் சுமார் 3.6 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக டிராய் அறிக்கை மூலமாக தெரிய வந்துள்ளது.

idea

கடந்த ஆகஸ்ட் 2018 காலகட்டத்தில் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் இணைப்பு நிகழ்ந்தபோது ஜியோவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக இந்திய டெலிகாம் உலகில் பேச்சு அடிபட்டது. ஆனால், தற்போது வோடபோன் ஐடியா நிறுவனம் பெருமளவில் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது அந்நிறுவனத்துக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.