சுபஸ்ரீ உயிரிழந்து 9 நாட்கள் ஆகிவிட்டது: குற்றவாளி மீது தூசு கூடப்படாமல் போலீஸ் காப்பாற்றுவது யாருக்காக?

 

சுபஸ்ரீ உயிரிழந்து 9 நாட்கள் ஆகிவிட்டது: குற்றவாளி மீது  தூசு கூடப்படாமல் போலீஸ் காப்பாற்றுவது யாருக்காக?

லாரி ஓட்டுநர் மனோஜ் கைது செய்யப்பட்டார். பின்பு  அவசர அவசரமாக  அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன

சுபஸ்ரீ மரணமடைந்து 9 நாட்கள் ஆகும் நிலையில் குற்றவாளி இதுவரை கைது செய்யப்படாதது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

subasri

கடந்த 13 ஆம் தேதி  சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் நிலைதடுமாறி விழுந்தார். அப்போது  அவருக்குப்  பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர சம்பவம் அங்கிருந்தவர்களைப் பதைபதைக்கச் செய்தது. இதையடுத்து லாரி ஓட்டுநர் மனோஜ் கைது செய்யப்பட்டார். பின்பு  அவசர அவசரமாக  அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. மாநகராட்சி அதிகாரிகள் பேனர்கள் அச்சடித்த அச்சகத்துக்குச் சீல் வைத்தது.

suba

இதேபோல் இளம்பெண் உயிரிழப்புக்குக் காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும்  போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினரும் லாரி ஓட்டுநர் மற்றும் பேனர்கள் வைத்தவர்கள் மீது  வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  இதையடுத்து இனி   திமுக, அதிமுக ஆகிய தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளும், நடிகர்களும்   எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இருப்பினும் சுபஸ்ரீயின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளியை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம்! காவல் நிலைய பாத்ரூமில் பலரும் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு போடும் நிலையில், ஆளுங்கட்சிப் பிரமுகர் மீது தூசு கூடப் படாமல் சென்னை போலீஸ் காப்பாற்றுவது யாருக்காக? என்று கடுமையாகச் சாடியுள்ளார்.