சுந்தர் பிச்சையின் தலைமையின் கீழ் நம்பிக்கை இழக்கும் ஊழியர்கள்; கலக்கத்தில் கூகுள்

 

சுந்தர் பிச்சையின் தலைமையின் கீழ் நம்பிக்கை இழக்கும் ஊழியர்கள்; கலக்கத்தில் கூகுள்

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சையின் தலைமையின் மீதான நம்பிக்கை ஊழியர்களிடையே குறைந்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது

கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சையின் தலைமையின் மீதான நம்பிக்கை ஊழியர்களிடையே குறைந்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

தேடுபொறி ஜாம்பவானான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பு தமிழரான சுந்தர் பிச்சையிடம் வழங்கப்பட்டது. சுந்தர் பிச்சை, சென்னையில் பள்ளிப்படிப்பையும், காரக்ப்பூர் ஐஐடி-யில் இளங்கலை பொறியியல் பட்டத்தையும் பெற்றவர். தொடர்ந்து, கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து எம்.எஸ். பட்டம், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்து எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர்.

கடந்த 2015-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். அவரது மேற்பார்வையின் கீழ், கூகுள் க்ரோம், மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஆகியவை உருவாக்கப்பட்டன. கூகுள் நிறுவனத்திற்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், விளம்பரம், கூகுள் மேப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட தயாரிப்புகளில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு இருந்து வந்தது.

இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சையின் தலைமையின் மீதான நம்பிக்கை ஊழியர்களிடையே குறைந்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், சுந்தர் பிச்சையின் தலைமையின் கீழ் கூகுள் நிறுவனம் ஈட்டிய சாதனை தங்களுக்கு ஊக்கமளிப்பதாக 78 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதேபோல், சுந்தர் பிச்சை தலைமையில் கூகுளை எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்ல தயாரா? என்ற கேள்விக்கு 74 சதவீதம் பேர் ஆதரவாக பதிலளித்துள்ளனர். சுந்தர் பிச்சை எடுக்கும் முடிவுகள், உத்திகளுக்கு 75 பேர் ஆதரவளித்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் முறையே 10, 18 சதவீதம் குறைவாகும்.

சுந்தர் பிச்சைக்கு ஆதரவு அதிகமாக உள்ளபோதும், கடந்த ஆண்டை ஒப்பிடும் போதான சதவீத குறைவு கூகுள் நிர்வாகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.