சுஜித் புகைப்படங்களை வெளியிடாதது ஏன்? : வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்!

 

சுஜித் புகைப்படங்களை வெளியிடாதது ஏன்? : வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்!

சுஜித் மீட்புப்பணிகள் குறித்து சிலர் விமர்சித்தும், குழந்தையின் உடல் முழுமையாக மீட்கப்படவில்லை என்றும் கூறி வருகின்றனர். 

சுஜித்தின் படங்கள் ஏன்  வெளியிடப்படவில்லை என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். 

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் 5 நாட்கள்  போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்டெடுக்கப்பட்டான். இதையடுத்து சுஜித்தின்  உடல்  இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. குழந்தையை  மீட்க வேண்டும் என்று ஒரே நோக்கத்தோடு இரவு பகல் பாராமல் உழைத்த அத்தனை பேருக்கும் சுஜித்தின் மரணம் மீளா துயரை தந்துள்ளது. இருப்பினும் சுஜித் மீட்புப்பணிகள் குறித்து சிலர் விமர்சித்தும், குழந்தையின் உடல் முழுமையாக மீட்கப்படவில்லை என்றும் கூறி வருகின்றனர். 

SUJITH

இந்நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் சென்னையில்  இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சுஜித்தை  மீட்க மீட்பு படையினர் அத்தனை போராடியும் அவர்கள் போராட்டம் விமர்சிக்கப்படுவது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகள் குறித்தும்,  என்ன நடந்தது என்பதும் சுஜித்தின் பெற்றோருக்கு முழுமையாக தெரியும். கும்பகோணம் தீ விபத்து குழந்தைகளின் படங்களை காட்சிப்படுத்தியதால் பல விமர்சனங்கள் எழுந்தன. அதனால் தான் சுஜித்தின் படங்கள் வெளியிடப்படவில்லை. இறந்த பிறகு சடலத்தை மீட்டது என்பது விதிகளின் படி பேரிடர் மீட்புக் குழுவின் ஆலோசனைப்படியே நடந்தது’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,  சுஜித்தை மீட்டதற்கு பல கோடிகள்  செலவானதாக வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தி. ஆழ்துளை கிணறு என்பது விபத்து தான், பேரிடர் அல்ல. சுஜித்தை உயிருடன் மீட்க முடியாதது  துரதிஷ்டவசமானது’ என்றார்.