சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா டிசம்பர் 14 ஆம் தேதி தொடக்கம்!

 

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா டிசம்பர் 14 ஆம் தேதி தொடக்கம்!

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா வருகிற 14-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

கன்னியாகுமரி: 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

siva

இந்த ஆண்டுக்கான மார்கழித்திருவிழா வருகிற 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

முன்னதாக 13-ந்தேதி காலை 18 பிடாகைகள், ஊர் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதனையடுத்து அன்று மாலை 4 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோயிலில் இருந்து மரபுப்படி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடி பட்டத்தை மேளதாளம் முழங்க முத்துக்கொடை ஏந்தி வந்து திருக்கோயில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

siva

விழாவில் முதல் நாளான 14-ந்தேதி காலை 6 மணிக்கு மாணிக்கவாசகர் பூஜையும் 9.15 மணிக்கு மேல் தாணுமாலய சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் தெற்கு மண்மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைக்கிறார். 

அதனை தொடர்ந்து வட்டபள்ளி மடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகள் செய்கிறார். அதன் பின்னர் திருமுறை பெட்டக ஊர்வலம், திருவெம்பாவை பாராயணம் நடைபெறுகிறது.

siva

அதனையடுத்து மாலை 5 மணிக்கு தேவார இன்னிசையும் , 7 மணிக்கு சமய சொற்பொழிவும் , 8.30 மணிக்கு சிறப்பு பட்டிமன்றமும் நடைபெறுகிறது.

அதனையடுத்து விழாவின் சிகர நிகழ்ச்சியான 23 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆரூத்ரா தரிசனமும் மாலை 5 மணிக்கு நடராஜர் மூர்த்தி வீதி உலாவும், 6.30 மணிக்கு பக்தி இன்னிசையும், இரவு 9 மணிக்கு ஆராட்டு விழா  நிகழ்வும் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோயில் பணியாளர்களும், பக்தர்களும், சுசீந்திரம் தெய்வீக இயல்இசை நாடக சங்கமும் இணைந்து செய்து வருகிறார்கள்.