சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

 

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அதனையடுத்து விசாரணையை தொடங்கிய ஆணையம், ஜெயலலிதா உடன் இருந்தவர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அப்போலோ நிர்வாகம், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள், அரசு மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் ஆனுப்பி விசாரித்து வருகிறது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி ஆணையத்திடம் விளக்கம் அளித்து வருகின்றனர். இதுவரை சுமார் 130-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கஜா புயல் நிவாரண பணிகளில் அவர் இருப்பதால் வருகிற 17-ம் தேதி வரை அவருக்கு கால அவகாசம் அளித்துள்ள ஆணையம் அதற்கு ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் தீவிர படுத்தியுள்ள நிலையில், எம்எல்ஏ-க்கள், எம்பி-க்களுக்கும் ஆணையம் சம்மன் அனுப்பி விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.