சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர். யாருடைய குடியுரிமையையும் பறிக்காது….. அஜித் பவார்…. மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பம்

 

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர். யாருடைய குடியுரிமையையும் பறிக்காது….. அஜித் பவார்…. மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பம்

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர். யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என மகாராஷ்டிராவின் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவார் பேசியிருப்பது பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.), மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) போன்றவற்றுக்கு சிவ சேனா தலைவரும், அம்மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்தார். ஆனால் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. (தேசிய குடிமக்கள் பதிவேடு) ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

உத்தவ் தாக்கரே

இந்நிலையில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், அம்மாநில முதல்வருமான அஜித் பவார் சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. ஆகியவற்றுக்கு ஆதரவாக பேசியுள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அஜித் பவார் பேசுகையில் கூறியதாவது: சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர். யாருடைய குடியுரிமையையும் பறிக்காது.

சரத் பவார்

சி.ஏ.ஏ. மற்றும் என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிராக மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. பீகார் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை  சுட்டிக்காட்டி சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இந்த பிரச்சினை குறித்து அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கடந்த டிசம்பரில், மகாராஷ்டிராவில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த கூடாது. அது நம் நாட்டின் மத மற்றும் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் என நான் அஞ்சுகிறேன் என தெரிவித்து இருந்தார். ஆனால் அந்த கட்சியை சேர்ந்தவரும், குறிப்பாக சரத்பவாரின் நெருங்கிய உறவினருமான அஜித் பவார் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேசியிருப்பது அந்த கட்சிக்குள் புகைச்சலை கிளப்பியுள்ளது.