சிவ சேனாவை பணிய வைத்த பா.ஜ.க.! சூடு பிடிக்கும் மகாராஷ்டிரா தேர்தல் களம்

 

சிவ சேனாவை பணிய வைத்த பா.ஜ.க.! சூடு பிடிக்கும் மகாராஷ்டிரா தேர்தல் களம்

எதிர்வரும் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வும், சிவசேனாவும் தனித்தனியாக போட்டியிட்டன. பா.ஜ.க. 122 இடங்களை வென்றது. சிவசேனா 63 இடங்களை கைப்பற்றியது. சிவசேனாவின் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியை அமைத்தது. கூட்டணியில் இருந்தாலும் கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜ.க.வை சிவசேனா விமர்சனம் செய்து வந்தது. இதனால் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் 2 கட்சிகளும் இணைந்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது. 

உத்தவ், அமித் ஷா, பட்னாவிஸ்

ஆனால் எதிர்வரும் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனாவுடன் இணைந்து போட்டியிடுவோம் என பா.ஜ.க. முதல்வர் தேவந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். சிவசேனாவும் அதே கருத்தை தெரிவித்து இருந்தது. இந்நிலையில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் 50-50 என்ற விகிதத்தில் 144 இடங்கள் வேண்டும் என சிவசேனா கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் அதற்கு பா.ஜ.க. மறுத்து விட்டது. இதனால் மீண்டும் கூட்டணி அமையுமா என்ற சந்தேகம் எழுந்தது. 

ஆதித்ய தாக்கரே

இந்நிலையில் பா.ஜ.க.-சிவசேனா இடையே தொகுதி பங்கீடு நேற்று சுமூகமாக முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க. 144 தொகுதிகளிலும் கூட்டணியில் உள்ள சிறு கட்சிகள் 18 இடங்களில் போட்டியிடும். அதேசமயம் சிவசேனாவுக்கு 126 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் போது துணை முதல்வர் பதவி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு வழங்க பா.ஜ.க. சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 21ம் தேதியன்று அந்த மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 24ம் தேதி முடிவுகள் வெளியாகிறது.