சிவாஜி கணேசனின் பிறந்தநாளை மறந்துவிட்டீர்களா? நடிகர் சங்கத்துக்கு சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம்! 

 

சிவாஜி கணேசனின் பிறந்தநாளை மறந்துவிட்டீர்களா? நடிகர் சங்கத்துக்கு சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம்! 

நடிகர்திலகம் சிவாஜி பிறந்தநாளை ஏனோதானோவென்று அணுகிய தென்னிந்திய நடிகர்சங்கத்திற்கு நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 92-வது பிறந்தநாளான இன்று (01 -10 -2019).  தமிழகம் மட்டுமின்றி, உலகத் தமிழர்கள் அனைவரும் கொண்டாடிய வேளையில். தென்னிந்திய நடிகர்சங்கத்திற்கு மட்டும் இதனைக் கொண்டாட நேரமில்லை. ஏற்கனவே. ஜுலை 21 ஆம் தேதி, நடிகர் திலகத்தின் நினைவுநாள் என்பதையே நடிகர் சங்கம் மறந்துபோனது.

இதுதொடர்பாக சிவாஜி சமூகநலப்பேரவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென்னிந்திய நடிகர்சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்று, முடிவிற்காக காத்திருந்தாலும் ஏற்கனவே பொருப்பில் இருப்பவர்கள் அதே பதவிகளில் தொடர்வதாகத்தான் அர்த்தம்.  அவர்களுக்கும் சரி, புதிதாகப் பொருப்பிற்கு வரத் துடித்து போட்டியிட்டவர்களுக்கும் சரி. கலைத்தாயின் தலைமகனின் பிறந்தநாள் நினைவிற்கு வராமல் போனது தமிழகத்தின் கலைத்துறைக்கே ஏற்பட்ட  துரதிருஷ்டம்தான்.

Sivaji

நடிகர்சங்கப் பொறுப்பிலிருப்பவர்களுக்கு எக்கச்சக்க பணிகள் இருந்திருந்தால், முக்கிய  கலைஞர்கள், மூத்த நடிகர்களை மாலை அணிவித்து மரியாதை செய்யப் பணித்திருக்கலாம்.  ஆனால், யாரோ இருவரை பெயருக்கு அனுப்பி மாலை அணிவிக்கச் செய்திருப்பதற்காக, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகளவில் தமிழ் சினிமாவை உயர்த்திய, தமிழ்க்கலையின் அடையாளமாக விளங்கிய நடிகர்திலகம் சிவாஜி பிறந்தநாளை உதாசீனப்படுத்திய நடிகர்கள், கலைஞர்களை தமிழ் சமூகம் மன்னிக்காது. தென்னிந்திய நடிகர்சங்கம் என்ற பெயரை மாற்றி, தமிழ் நடிகர்கள் சங்கம் என்று பெயரிட்டாலாவது, தமிழகம் ஈன்றெடுத்த தவப்புதல்வன் நடிகர்திலகம் சிவாஜி அவர்களைக் கொண்டாடுவார்களா? என்ற எதிர்பார்ப்புதான் இப்போது தமிழ் நெஞ்சங்களின் எண்ண ஓட்டமாக உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.