சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசு முடிவு

 

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசு முடிவு

சென்னை: சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கொள்கை முடிவெடுத்துள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சிலை கடத்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சிலை கடத்தல், பழமைவாய்ந்த கோவில் பொருட்கள் மாயம் சம்பவம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி மகாதேவன் தலைமையில் சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய .ஜி பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, சிலை கடத்தல், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களின் பாதுகாப்பு, அதன் சிலைகளின் எண்ணிக்கை மற்றும் அதனைப் பாதுகாக்கும் முறைகள் குறித்து நீதிமன்றம் விசாரித்து வந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்படும் என்று நீதிபதி மகாதேவன் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திருச்சி திருவரங்கம் கோயில் பொருட்கள் மாயமான சம்பவம் குறித்த வழக்கு, சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றிட தமிழக அரசு கொள்கை முடிவு எடுள்ளதாக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ தான் விசாரிக்கும் என்று வாதிட்ட அவர், ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையில் அமைக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பாக செயல்படவில்லை. இப்பிரிவு நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு ஓராண்டு கடந்தும், இதுவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் அரசுக்கு ஒரு அறிக்கை கூட அளிக்கவில்லை என்றும் வாதிட்டார்.

 

அப்போது வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆஜராகி அரசின் கொள்கை முடிவை எதிர்த்து வழக்கு தொடர்வதாக தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்டு 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அன்றைய தினம் அரசின் கொள்கை முடிவு குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.