சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய அரசாணை ரத்து; பொன்.மாணிக்கவேல் பதவியில் நீடிப்பார்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய அரசாணை ரத்து; பொன்.மாணிக்கவேல் பதவியில் நீடிப்பார்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை ரத்து செய்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் ஓராண்டு பதவியில் நீடிப்பார் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் ஆணை ரத்து செய்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் ஓராண்டு பதவியில் நீடிப்பார் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் உள்ள புராதன சிலைகள் கடத்தப்பட்டன. இதையடுத்து சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனால், தமிழகம் முழுவதும் நடந்த சிலை கடத்தல் தொடர்பான அனைத்து  வழக்குகளையும் விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து விசாரணையை தொடங்கிய பொன்.மாணிக்கவேல் தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சொந்தமான ராஜராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்து அரசியான உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட ஏராளமான சிலைகளை மீட்டார். 

இதனையடுத்து சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. பொன்.மாணிக்கவேல் சிறப்பாக பணியாற்றி வரும் சூழலில் எதற்காக இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு  தமிழக அரசு பிறப்பித்த ஆணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே ஐஜி பொன். மாணிக்கவேல் இன்றுடன் பணி ஓய்வு பெறவும் இருந்தார்.

இந்த வழக்கை 2 மாதங்களாக விசாரித்த நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த சூழலில், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் மேலும் ஒரு ஆண்டுக்கு நீடிப்பார் எனவும் உத்தரவிட்டுள்ளது.