சிறையில் இருந்து வருகிறாரா சசிகலா? நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

 

சிறையில் இருந்து வருகிறாரா சசிகலா? நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா மற்றும் பாஸ்கரன் ஆகியோர் மீது கடந்த 1996-ஆம் ஆண்டு அன்னிய செலவாணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது

சென்னை: அன்னிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெ.ஜெ, டிவி-க்கு எலெக்ட்ரானிக் கருவிகள் வாங்கியதில் பல கோடி ரூபாய் வெளிநாடுகளில் இருந்து பண பறிமாற்றம் செய்துள்ளதாக, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா மற்றும் பாஸ்கரன் ஆகியோர் மீது கடந்த 1996-ஆம் ஆண்டு அன்னிய செலவாணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

parappana agrahara

இந்த வழக்கானது சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் பல ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சசிகலா மற்றும் பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் நீதிமன்றம் முடிவு செய்தது. அதன்படி, அவர்கள் இருவரும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், சிறையில் இருக்கும் சசிகலா உடல்நலக் குறைவு காரணமாக நேரில் ஆஜராக முடியாமல் போனது. இதையடுத்து, காணொலிக் காட்சிகள் மூலம் ஆஜர்படுத்தப்பட்ட சசிகலாவிடம் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.

அமலாக்கத்துறையின் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், சாட்சிகள் அளித்த சாட்சியங்கள் குறித்து விளக்கம் கேட்கவும், நீதிபதிகளின் கேள்விக்கு சசிகலாவிடம் பதில் பெறும் நடவடிக்கையும் நிலுவையில் உள்ளது.

sasikala

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க சசிகலாவை மே 13-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்போது, சாட்சிகள் அளித்த சாட்சியங்கள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.