சிறுமியை சீரழித்த இமாம்; கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

சிறுமியை சீரழித்த இமாம்; கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கேரளாவில் இமாம் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி, குழந்தைகள் நல அமைப்பிடமே தொடர்ந்து இருக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

திருவனந்தபுரம்: கேரளாவில் இமாம் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி, குழந்தைகள் நல அமைப்பிடமே தொடர்ந்து இருக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் ஷஃபிக் அல் குவாஸிமி. இவர் தோலிகோடு முஸ்லிம் மசூதியில் இமாமாக உள்ளார். அத்துடன் கேரள இமாம் கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இவர் 15 வயது சிறுமி ஒருவரை காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இதனையடுத்து தோலிகோடு முஸ்லிம் மசூதி சார்பில் குவாஸிமியிடம் தனி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அகில இந்திய இமாம் கவுன்சிலில் இருந்தும் குவாஸிமி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இமாம், சிறுமி ஒருவருடன் காட்டிற்குள் இருந்து வருவதை பார்த்த அப்பகுதி மக்கள், அவரிடம் அப்பெண் யார் என கேட்டுள்ளனர்.  அதற்கு இவர் தன் மனைவி என இமாம் கூறியுள்ளார். ஆனால் காருக்குள் பள்ளி சீருடை மற்றும் பேட்ஜ் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த ஊர்மக்கள், பள்ளி மாணவி எப்படி மனைவியாக முடியும் எனப் பெண்கள் கேட்டதற்கு குவாஸிமி காருடன் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். இதனையடுத்து, அவரின் காரை பிடிக்க அவர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் அங்கிருந்து காரை வேகமாக இயக்கி தப்பியுள்ளதாக தெரிகிறது.

இச்சம்பவம் பற்றி வெளியில் கூற விரும்பாத மாணவியின் குடும்பத்தினர், காவல்நிலையத்தில் புகார் அளிக்கவும் மறுத்துள்ளனர். இந்த தகவல் ஊடகங்களில் வெளியான பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, சிறுமி பலவந்தமாக குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். எனவே, அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரி அவரது பெற்றோர் சிறுவர் நீதி வாரியத்திடம் முறையிட்டனர். அத்துடன், கேரள உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவையும் சிறுமியின் பெற்றோர் தாக்கல் செய்தனர். ஆனால், சிறுவர் நீதி வாரியத்தின் உத்தரவு வரும் வரை காத்திருக்குமாறு உயர் நீதிமன்றம் கூறியதால், ஆட்கொணர்வு மனுவை சிறுமியின் பெற்றோர் திரும்பப் பெற்றனர்.

ஆனால், சிறுமியின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவை சிறுவர் நீதி வாரியம் ரத்து செய்ததால், கேரள உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை சிறுமியின் பெற்றோர் தாக்கல் செய்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை குழந்தைகள் நல அமைப்பே சிறுமியை பராமரிக்க உத்தரவிட்டுள்ளது.